வராஹ  புராணத்தில் நாராயணர் சிவதரிசனத்தைப் பெறத் தவமியற்றல்

-சந்த்ரு ராஜமூர்த்தி @ vaidika saivan

வைஷ்ணவப் புராணமான வராஹ புராணத்தில், விஷ்ணுவானவர் பரமேஸ்வரனைக் காணத் தவம் செய்த வரலாறு அதன் 144 வது அத்தியாயத்தில் உள்ளது. அதை இப்போது பார்ப்போம்.
பூமிதேவியானவள் கூறினாள், “ பிரயாகையில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஒன்றினையும் த்ரிவேணி சங்கமத்தில், பரமேஸ்வரன் ஸூலடங்கன் மற்றும் ஸோமேஸ்வரன் என்ற திருநாமங்களோடும், விஷ்ணுவானவர் வேணிமாதவர் என்றத் திருப்பெயரோடும் வீற்றிருக்கின்றார் என்றும், அனைத்து தேவர்களும் ரிஷிகளும் தீர்த்தங்களும் அங்கே வாசம் செய்கின்றார்கள் என்றும், அங்கே ஸ்நானம் செய்பவர்கள் ஸ்வர்கத்தை அடைவார்கள் என்றும், அங்கே மரணமடைபவர்கள் முக்தியடைவார்கள் என்றும், அதுவே அனைத்துத் தீர்த்தங்கறிற்கும் அரசன் என்றும், விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த தீர்த்தமென்றும் கேள்வியுற்றேன். ஆனால், தாம் மற்றுமொரு தீர்த்தம் உள்ளதென்றும் அது பரம குஹ்யமானதென்றும் கூறுகின்றீர்கள். தயை கூர்ந்து உலக நன்மையின் பொருட்டு அதைப் பற்றிக் கூறுமாறு வேண்டுகின்றேன்.
ஸ்ரீ வராஹமூர்த்தி கூறினார், “கேட்பாய் ஓ தேவி! நீ அறியவிரும்பியதையும் அதனோடு தொடர்புடைய ஒரு சரிதத்தையும் கூறுகிறேன்.
முன்னொரு காலத்தில், தேவர்களுக்கு விருப்பமான அழகுகொஞ்சும் இமயமலைச் சாரலில் விஷ்ணுவானவர் உலகக் க்ஷேமத்தின் பொருட்டு தவம் இயற்றலானார்.
நெடுங்காலத்திற்குப் பிறகு, மிகப்பெரிய ஜ்யோதியொன்று அவரிடமிருந்து தோன்றியது.
அதன் வெப்பத்தின் தாக்கத்தால், நாராயணரின் கன்னங்களிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத் துளிகள், பாவங்களைப் போக்கவல்லதானதொரு நதியாக மாறி ஒடத் தொடங்கியது. இந்த நிகழ்வு அனைத்து உலகங்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆயினும், இந்த அதிசயத்தின் காரணத்தை யாரும் அறிந்தாரில்லை.
அதிசயமுற்ற தேவர்கள் அனைவரும் ஆர்வமிக்கவராய் நான்முகன் உலகத்தை  நண்ணி இந்த அதிசயம் நிகழ்வதற்கான காரணத்தை வினவினார்கள். ஆனால், விஷ்ணுமாயையால் பீடிக்கப்பட்டப் பிதாமஹர் அதன் காரணத்தை அறிந்திலர். ஆதலால், அவர் தேவர்களை அழைத்துக் கொண்டு பரமேஸ்வரரிடம் சென்றார்.
தேவர்களுடன் வருகை புரிந்த ப்ரஹ்மனைக் கண்ட சிவபெருமான் அவர்களின் வருகைக்கான காரணத்தை வினவினார். ப்ரஹ்மன் பரமேஸ்வரனைப் பணிந்து,”ஹே மஹேஸ்வரா! அனைத்து லோகங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஓர் அற்புத ஜோதி தோன்றியுள்ளது. ஆயினும், அது எங்கிருந்து தோன்றிற்று என்பதை எங்களால் அறிந்துகொள்ளமுடியவில்லை.”
பரமசிவனார் சிலநொடிகள் த்யானத்தில் ஆழ்ந்தார். பின்னர், அந்த ஜ்யோதியின் மூலத்தை  தேவர்களுக்குக் காட்டுவதாகக்  கூறினார். உமையவளையும் கணங்களையும் அழைத்துக்கொண்டு தேவர்கள் புடைசூழ, விஷ்ணு தவமியற்றும் இடத்திற்குச் சென்றார்.
பரமேஸ்வரன், ”தாம் உலகத்தைப் படைத்தும்  காத்தும் வருகிறீர். அவ்வாறு இருக்க, எதனைப் பெறவேண்டி இவ்வாறு தவம் செய்கிறீர்?”என்று விஷ்ணுவை வினவினார்.
நாராயணர் பரமேஸ்வரரை நமஸ்கரித்து,”அனைத்து உலகங்களின் நாயகரே! உலக நன்மைக்காகவும், தமது தரிசனத்தை பெற்று வரங்களைப் பெறுவதற்காகவும் தான் நான் தவம் புரிய ஆரம்பித்தேன். ஆயினும் தற்போது தமது திவ்ய தரிசனத்தைக் கண்ட பின்பு நான் முழுமையாகத் திருப்தி அடைந்துவிட்டேன் ஐயனே,”என்றார்.
பரமேஸ்வரன் கூறினார்,
“இது கண்டமாத்திரத்தில் முக்தியளிக்கக்கூடிய முக்தி க்ஷேத்திரமாகும். உமது கன்னங்களிலிருந்து தோன்றிய வியர்வையிலிருந்து உற்பத்தியான நதி “கண்டகி”என்றழைக்கப்படும். வருங்காலத்தில் தாம் இந்த நதியில் ( சாளக்ராமமாக) வாசம் செய்வீர். அதன் காரணமாக நானும் மற்றும் நான்முகன், தேவர்கள், ரிஷிகள், தீர்த்தங்கள் முதலிய அனைவரும் இந்தக் கண்டகியில் என்றுமே  வாசம் செய்வோம்.
கார்த்திகை மாதம் முழுவதும் இதில் ஸ்நானம் செய்பவன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு முக்தியடைவான். இது அனைத்துத் தீர்த்தங்களிற்கும் தீர்த்தமாக விளங்கும். மிகவும் பவித்ரமானது. இதில் ஸ்நானம் செய்பவன் கங்கையில் ஸ்நானம் செய்த பலனை அடைவான். இதை ஸ்மரிப்பதாலும், காண்பதாலும், ஸ்பரிசிப்பதாலும் ஒருவன் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். இது கங்கைக்கு ஒப்பானது. போகமோக்ஷங்களை அருளவல்லது. – 144.100-128
Share this post on: